இணையதளங்களில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தணிக்கையா? கபில்சிபல் பதில்
இணைய கருத்துகளை தணிக்கை செய்ய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் நிராகரித்துள்ளார்.
ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் முன்பு நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒத்துழைப்பு தரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் நடவடிக்கை குறித்து பேசிய கபில்சிபல், இந்தியர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் காயப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் இந்தியாவில் உள்ள மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது என்றார் அவர்.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு செப்டம்பர் மாதம் முதல் ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளேன். அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் பேசியிருக்கிறேன் என அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று இந்த நிறுவனங்கள் கூறிவிட்டன என்றார் அவர்.
இதையடுத்து இதுபோன்ற நிறுவனங்களின் பயனாளர்கள் கருத்துக்களை வெளியிடும் முன்பு கண்காணித்து, முன்கூட்டியே தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது என கபில் சிபல் கூறினார்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....