அணுசக்தியை வெல்லுமா மக்கள்சக்தி?
இன்று கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாக கூறப்படும் கருத்துக்கள் இவைதான்,
1. நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தைவிட்டால் வேறு வழியில்லை.
2. கூடங்குளம் அணு உலை மிகவும் பாது காப்பானது. பயப்படத் தேவையில்லை.
3. இத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தாமல், இப்போது அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன்?
4. கூடங்குளம் அணுஉலை ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்பதால் அமெரிக்கா நாட்டின் கைக்கூலிகளே இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.
1. நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தைவிட்டால் வேறு வழியில்லை.
2. கூடங்குளம் அணு உலை மிகவும் பாது காப்பானது. பயப்படத் தேவையில்லை.
3. இத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தாமல், இப்போது அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன்?
4. கூடங்குளம் அணுஉலை ரஷ்யாவின் தொழில்நுட்பம் என்பதால் அமெரிக்கா நாட்டின் கைக்கூலிகளே இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.
இவைகள்தான் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை பற்றி பரவலாக கூறப்படுவது. சில நாளிதழ்கள் திட்டமிட்டு இந்த வதந்திகளை நிரூபிக்கத் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஒருசில பொய்யை தொடர்ந்து கூறி வந்தால் அது உண்மையாகிவிடும் என அந்த நாளேடுகளின் நினைப்பு. ஆனால் யதார்த்தம் வேறுவிதமானது. ஒவ்வொன்றையும் சற்று ஆழமாக அலசினால்தான் உண்மைபுரியும்.
அணுஉலை மின்சாரம்
நாட்டிற்கு நிறைய மின்சாரம் தேவை. அதற்கு அணு சக்தியை விட்டால் வேறு வழியே கிடையாது என கூறப் படுவது அப்பட்டமான பொய். இப்போது இந்தியாவின் மின்சார உற்பத்தி 156783.98 மெகாவாட் (31.10.2010). இதில் நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மூலம் கிடைக்கும் அனல் மின்சாரம் 59693 மெகாவாட். இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 75.8 சதவிகிதம். அணைகளில் மற்றும் நீர்வீழ்ச்சிகளினால் உற்பத்தி செய்யப்படும் புனல் மின்சாரம் 15627 மெகாவாட். இது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 19.9 சதவிகிதம். அணுஉலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரம் 3380 மெகாவாட். இது நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 4.3 சதவிகிதம். இது மத்திய மின்சார அமைச்சகத்தின் ஆண்டறிக்கை 2009-2010-இல் 11-ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சூரியசக்தி, காற்றாலை மற்றும் மரபுசாரா எரிப்பொருள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மட்டும் 18,842 மெகாவாட் (2011). இப்படி அனைத்துவித மின் உற்பத்தியிலும் மிக மிகக் குறைவான மின்சாரத்தை வழங்குவது அணு சக்தி. ஆனால் இந்த அணுசக்தி மின்சாரத்திற்குதான் அனைத்துவித மின்சாரத்திற்கான முதலீட்டைவிட மிக மிக அதிகம் முதலீடு தேவையாகிறது.
சூரியசக்தி, காற்றாலை போன்ற முறைக்கு அரசு ஒதுக்கீடு தொகை வெறும் 600 கோடி ரூபாய்தான். அதிலேயே அவை 5 சதவீத மின்சாரத்தை தந்து விடுகின்றது. இப்போது அணுமின்சாரத்திற்கு ஒதுக்கும் தொகை 3,897 கோடி ரூபாய். ஆனால் அவை தருவது 2.5 சதவிகித மின்சாரம்தான். அதுவும் அந்த மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 8 ரூபாய் என்பது மக்கள் வரி பணத்தை இந்த அரசு வீண் செலவு செய்கிறது என்பது தெரியும்.
அணுஉலையையும் காற்றாலை மின்சாரத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் நாம் என்ன சொல்வோம். மின் உலையைவிட காற்றாலையே சிறந்தது எனக் கூறுவோம். இதைதான் தமிழக அரசின் மின்சாரத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு 2010-11 (சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை) இல் 5-7 பக்கங்களில் குறிப்பிட்டுள்ளதை இங்கு அப்படியே தருகிறேன்.
""தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்திக்கு ஏதுவான இயற்கை வானிலை, மலைப்பகுதி ஆகிய வளங்கள் அமைந்துள்ளன. பாலக்காடு, செங்கோட்டை மற்றும் ஆரல்வாய்மொழி கனவாய்களில் தென்மேற்கு பருவ காலங்களில் காற்றின் வேகம் இயற்கையாகவே அதிகமாக உள்ளது என கண்டறியாப்பட்டுள்ளது. 1986-ஆம் ஆண்டில் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மற்றும் இந்திய அரசின் மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் உதவியுடனும் 1.165 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் முல்லைக்காட்டில் நிறுவப்பட்டது. அதன் பிறகு கயத்தாறு, முப்பந்தல், புளியங்குடி போன்ற பிற பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தமிழ்நாடு மின்சாரவாரியத்தால் நிறுவப்பட்டன.
1986-ஆம் ஆண்டு முதல் 1993-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சார ,வாரியத்தால் மொத்தம் 120 காற்றாலைகள் 19.355 மெகாவாட் மொத்த நிறுவுத் திறனுடன் நிறுவப்பட்டன. மேற்கண்ட இடங்களில் காற்றாலைகள் வெற்றிகரமாக இயங்கியதாலும், அரசு ஏற்படுத்திக் கொடுத்த சாதகமான சூழ்நிலைகளாலும் பல தனியார் நிறுவனங்கள் காற்றாலைகளை நிறுவியுள்ளன. 2008-09 ஆண்டில் மொத்த கொள்திறனை 4287.740 மெகாவாட்டை எட்டியுள்ளன. எட்டி 2009-10 ஆம் ஆண்டில் 4889.765 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக மின் உற்பத்தியின் அளவும் 2008-2009-ஆம் ஆண்டில் 6655.150 மில்லியன் யூனிட்டிலிருந்து 2009-2010-ஆம் ஆண்டில் 8145,508 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நிறுவுத்திறன், காற்றாலைகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் மொத்த நிறுவுதிறனில் சுமார் 44 விழுக்காடுகள் ஆகும். இதன்மூலம் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது'' (ஆதாரம்: தமிழ்நாடு அரசின் மின்சாரத் துறை கொள்கை விளக்கக்குறிப்பு 2010- 11 பக்கம் 5-7) என உள்ளது.ஆக, மரபுசாரா மின்உற்பத்தியில் செலவு என்பது மிக குறைவு. மின் உற்பத்தியோ அணுமின்சாரத்தைவிட பலமடங்கு அதிகம் என்பது தெரிகிறது. அப்படியிருக்க அணுமின் நிலையங்களை உருவாக்குவதன் ரகசியம் என்ன?
அணு உலை பாதுகாப்பானதா?
அணுஉலை பாதுகாப்பானது, பயப்பட தேவையில்லை. அணு விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டனர்.
அப்துல் கலாமே கூறிவிட்டார். அதனால் அணுஉலை பாதுகாப்பானதுதான் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. மக்கள் நலன்களையோ, உணர்வுகளையோ, நாட்டின் பொருளாதார நிலையையோ விஞ்ஞானிகள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொண்டவர்கள் கிடையாது. 45 சதவித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் கொண்ட நாட்டில், பல ஆயிரக்கணக்கான கோடிகளில் அணுகுண்டு சோதனை நடத்தியதும் சந்திராயன் திட்டத்தை நடத்துவதும் நாம் அறிவோம். ஆனால் மக்களோ இந்த தேசத்தையே கட்டி எழுப்பியவர்கள்.
நமக்கு எப்போதுமே அப்துல் கலாம் மீது மிகுந்த மதிப்புண்டு. காரணம் 1.அப்துல் கலாம் ஏழை குடும்பத்தில் பிறந்த விஞ்ஞானி 2. அவர் தமிழர், தமிழ்மொழியின் மீது பற்றுக் கொண்டவர். 3. இந்திய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பவர். இந்த மூன்றை தவிர அப்துல் கலாம் வேறு எந்த விதத்திலும் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. நாட்டையே உலுக்கிய 2002 குஜராத் முஸ்லீம் படுகொலை நடந்தபோது, அப்துல் கலாம் ஜனாதிபதி. அப்போது இவர் விடுத்த அறிக்கை, செயல்பாடுகள் குஜராத் மாநில அரசை நடத்தியவிதம் நாடறியும்.
அடுத்து அப்துல் கலாமின் கூடங்குளம் அணு உலை குறித்த கருத்துக்கு வருவோம். அப்துல் கலாம் கூடங்குளம் அணுஉலை நூறு சதவிகிதம் பாது காப்பானது என்று உறுதி கொடுத்தது மட்டுமல்லாமல் "த இந்து' நாளிதழில் சிறப்புக் கட்டுரை ஒன்றை நவம்பர் 6-ஆம் தேதி எழுதினார். அந்த கட்டுரையில் அணுசக்திதான் இந்திய மின்தேவைக்கு அவசியமானது என்று வலியுறுத்தி கூறியிருந்தார். இந்த கருத்து இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் இதே அப்துல் கலாமை அணுசக்தி பற்றி அப்துல் கலாம் கூற தகுதியற்றவர் என கூறிய காலமுண்டு. கலாம் அன்று அணு இயற்பியல் படித்த வரில்லை. அப்படி இருக்கையில் அவருக்கு அணு சக்தி விஷயங்கள் தெரியவாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது.
1998 -ஆம் ஆண்டு மே 11, 13 தேதிகளில் இரண்டாவது முறையாக இராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் (பொக்ரான்-2) என்ற இடத்தில் ஐந்து அணுகுண்டு வெடிப்புச் சோதனை அப்போதைய பி.ஜே.பி ஆட்சியில் நிகழ்த்தப்பட்டது. இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு முதன்மை அறிவியல் ஆலோசகராக இருந்தவர் அப்துல் கலாம். அணுகுண்டு வெடிப்பு சோதனை முடிந்த உடனே அவசர அவசரமாக ""சோதனை வெற்றி. அனைத்து குண்டுகளும் வெடித்து சாதனை புரிந்துவிட்டோம்'' என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். இதற்கு பொக்ரான்-2 சோதனை திட்டத்தின் தலைவர் கே.சந்தானம் கண்டனம் தெரிவித்தார். ""இந்த அணுகுண்டு வெடிப்பு சோதனையில் ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு தோல்வியில் முடிந்தது. இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி இருக்கையில் அப்துல் கலாம் எப்படி பேட்டியளிக்கலாம்'' என கூறினார்.
அதோடு சந்தானம் இந்து ஆங்கில நாளிதழ் 1998 மே 11-Bp Pokhran-II Thermo nuclear Test, a failure (www.thehindu.com/ opinion/op-ed/ article 21311/ece) கட்டுரை எழுதினார். இதனை பற்றி பி.பி.சி செய்தியில் "இந்திய அணு சோதனை வேலை செய்யவில்லை (India nuclear test did not work)' என்று செய்தி(News.bbc.co.uk/2/hi/8225540.stm) வெளியிட்டது. கே.சந்தானம் பொக்ரான் 11 திட்டத்தின் தலைவர் மட்டுமல்ல. இஆதஈ இல் 15 ஆண்டுகளாக பணியாற்றிய அணு விஞ்ஞானி. பொக்ரான்-1 திட்டத்தின் அறிவியல் ஆலோசகர். இவரது கருத்தை நாட்டின் பெரும்பான்மையான அணு விஞ்ஞானிகள் ஆதரித்தனர். அதிலும் முக்கியமாக ஹோமி நூசர் வாஞ்சி சேத்னா அப்துல் கலாமுக்கு கண்டம் தெரிவித்தார்.
சேத்னா இந்தியாவின் சிறந்த அணு விஞ்ஞானி மற்றும் வேதியியல் பொறியாளர். பொக்ரான்-1 அணு வெடிப்பு சோதனையின்போது இந்திய அணுசக்தி கமிஷன் தலைவராக இருந்தவர். சேத்னா தனது பேட்டியில் ""பொக்ரான்-2 பற்றி பேச அப்துல் கலாமுக்கு தகுதியில்லை. அவர் இந்திய அணு உலைகளில் எவற்றிலும் பணிபுரிந்தவர் கிடையாது. அப்படி இருக்க எப்படி கருத்து கூறலாம். அவருக்கு அணு இயற்பியல் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். (ஆதாரம்: Kalam not Qualified to talk about pokhran II: Sethna-news.rediff.com/report/2009/ sep/01/how-can-kalam-talk-on-pokhran/htm) இன்னும் அப்துல் கலாம் ஏவுகணை வடிவமை பற்றியும், அக்னி ஏவுகணையினை உண்மையில் வடிவமைத்தவர் டாக்டர் ஆர்.என்.அகர்வால் (Advanced system Laboratory and former program Diretor of Agni missile)
பல சர்ச்சைகள் உண்டு அவற்றை பற்றி பார்த்தால் கட்டுரையின் தன்மை மாறிவிடும். ஆகையாலும் அப்துல் கலாம் சிறந்த ஏவுகணை வடிவமைப்பாளர் என்பதில் ஐயமில்லை. இப்படி இருக்கையில் அப்துல் கலாம் அணு உலை பற்றி தெரிவித்த கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இடிந்தகரை பேராட்டம்
இத்தனை ஆண்டுகள் போராட்டம் நடத்தாமல், அணுஉலை உற்பத்தி தொடங்கும் சமயத்தில் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன? என்பது அடுத்ததாக கேட்கப்படும் கேள்வி. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டமானது, 23 ஆண்டுகள் போராட்டம் ஆகும். 1988-இல் கூடங்குளம் அணுஉலை அமைக்க இந்திய ரஷ்ய ஒப்பந்தம் கையெழுத் தாகிறது. அணுஉலை எதிர்ப்புப் போராட்டமும் அதே சமயத்தில் துவங்குகிறது. இடிந்தகரையில் கூடிய 1000 போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. 2001-இல் நிலம் அடையாளம் காணப்பட்டு, கையகப்படுத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. 2002 முதல் கான்கிரீட் ஊற்றப் படுகிறது. 2003 கூடன்குளத்திற்கு எதிராக 7000 பேர் கொண்ட போராட்டம் நடத்தப்படுகிறது. 2004 இல் பொருட்களை கொண்டு வருவதற்காக ஒரு துறைமுகம் உருவாக்கப்பட்டு, அணுஉலை அமைப்பதற்கான பொருட்கள் எடுத்து வரப்படுகின்றன. அணு உலைக்கு எதிராக கொடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற வழக்கு தோற்கிறது. 2011 ஜப்பான் நாட்டு ஃபுகுஷிமா அணு விபத்தின் பின்னணியில் தற்போதைய போராட்டம் உச்சத்தை அடைகிறது. (இந்திய டுடே, நவம்பர் 24-30, 2011 மலர்-23, இதழ் 17.)
போராட்டத்தை நடத்தும் அந்நிய சக்திகள்
கூடங்குளம் அணுஉலைப் போராட்டம் அயல்நாட்டு ஏஜெண்டுகளால் முன்னின்று நடத்தப்படுகிறது.. என்றவாதம் மிகப்பெரும் மோசடியானது. கூடங்குளம் அணுஉலை மூடப்பட்டுவிட்டால் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொண்டுவர நினைக்கும் அணு உலைகளை கொண்டுவர முடியாது என்று அமெரிக்க பயப்படுகிறது. எனவே இடிந்தக்கரையில் நடக்கும் போராட்டம் அமெரிக்க, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு எதிரான போராட்டம்.
அணுகுண்டும் அணுஉலையும்
1932-இல் ஜேம்ஸ் சாட்விக் என்னும் ஆங்கில அறிவியலறிஞர் அணுவில் நியூட்ரான் என்னும் சிறு துகள் இருப்பதைக் கண்டு பிடித்தார். 1930-களில் முழுவதும் அணுவை தாக்குவதினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் கண்டறிவதில் செலவிட்டார். அக்கால கட்டத்தில் ஒரு அணுவைப் தாக்கிய போது அது இரண்டாக பிளவுபடுவதைக் கண்டறிந்தனர். இதைக் கண்டறிந்த ஆஸ்திரிய அறிஞர் லைஸ் மெய்ட்னர் அதற்கு அணுப் பிளவு என்று பெயரிட்டார். அந்த அணுப் பிளவில் என்ன நடைபெறுகின்றது என்பது வரிசையாக கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு அணுப்பிளவு நடைபெறும்போது இரண்டு நியூட்ரான்கள் வெளிவருகின்றன.வெளிவரும்போது இரு நியூட்ரான்களும் அணுப்பிளவை உண்டாக்குவதால் 4 நியூட்ரான்கள் அதிலிருந்து கிளம்புகின்றன. இப்படி தொடர்ச்சியாக இந்த விளைவு இப்படி தொடர்கிறது. இதற்கான நேரம் மிகக் குறைவானது. ஒரு நொடியில் 5 கோடியில் ஒரு பங்கு நேரத்திற்குள் அணுப்பிளவு நடை பெற்றுவிடுகிறது. ஆகையால் ஏராளமானஆற்றல் குறுகிய நேரத்திற்குள் வெளிப்படுகிறது. இதுதான் அணுகுண்டாக மாற்றப்பட்டது.
அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டம். மேற்கத்திய நாடுகள் தத்தம் வலிலிமையை நிறுவிட புதிய புதிய ஆயுதங்கள் கண்டுபிடிக்க முனைந்தனர். கடுமையான சேதத்தை விளைவிக்கும் குண்டுகளை தயாரிக்க வேண்டும் என்று வெளிப் படையாக தெரிவிக்கவும் செய்தனர். முதலில் ஹைட்ரஜன் குண்டுகள் என்றும் பின்னர் அணுகுண்டு என்றும் கண்டுபிடிக்க போட்டா போட்டி நடைபெறத் துவங்கியது. அன்றைய அமெரிக்க அதிபர் ரூஸ்ட்வெல்ட் மேற்கத்திய நேசநாடுகள் ஓர் அணுகுண்டை தயாரிக்க விட்டால் சர்வாதிகாரி ஹிட்லர் அதை தயாரித்து விடுவான் என்று அஞ்சினார். 1941-இல் மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) என்ற பெயரில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களின் குழு கூடி விவாதித்தது. அடுத்த ஆண்டிலேயே 1942-இல் டிசம்பரில் சிகாகோ நகரில் ஒரு விளையாட்டு மைதானத்தின் அடியில் இரகசியமாக ஒரு யுரேனிய அணுஉலை அமைக்கப்பட்டு, அதில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சியானது வெற்றி பெற்றது. பின்னர் யுரேனியத்தைவிட ஆற்றல் மிகுந்த பொருளான புளுட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அணுகுண்டு தயாரிப்பில் மிக அத்தியாவசியமான பொருட்களான புளுட்டோனியமும் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் தயாரித்து குவிக்கப்பட்டன
1945 ஜூலையில் அணு வெடிப்புச்சோதனை நியூமெக்சிகோவில் நடைபெற்றது. இந்த வெற்றிக்களிப்பில் மக்கள்மீது அந்த சோதனையை நடத்த முற்பட்டனர். 1945 ஆகஸ்ட் 6-ஆம் தேதி மனிதகுல வரலாற்றில் மறக்க மற்றும் மன்னிக்க முடியாத குற்றத்தை நிகழ்த்தி னர். அன்றுதான் ஜப்பானிய நகரமான ஹிரோசிமா மீது யுரேனிய குண்டு வீசப்பட்டது. 3 நாள் கழித்து 9-ஆம் தேதியன்று நாகசாகியில் புளுட்டோனிய குண்டு வீசப் பட்டது. இந்த இரண்டு அணுகுண்டுகளினாலும் இரு நகரங்களும் சாம்பல் மேடாயின. இரண்டு லட்சம்பேர் அவ்விடத்திலேயே கருகிச் சாம்பலாயினர். அதனுடைய கதிரியக்க விளைவுகளால் பின்னர் இறந்தவர்கள் ஒரு லட்சம் பேர் இன்றும்கூட ஜப்பானில் ஆண்டுக்கு 2 ஆயிரம்பேர் அதனுடைய விளைவுகளால் இறந்து கொண்டிருக்கின்றனர்.
முதலில் அணுப்பிளவின்போது வெளிப்பட்ட வெப்பம் தேவையற்றதாக கருதப்பட்டது. அதை பயன்பாடு அற்றது என்று அறிவிய லாளர்கள் கருதினர். 1940வரை அணு உலைகளை புளுட்டோனியம் மட்டுமே தயாரிக்க பயன்படுத்தினர். அப்புளுட்டோனியம் அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் 1940-களின் கடைசியில் மலிலிவான புதைபடிவ எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது .அப்போது அணு உலைகளில் வெளியாகும் வெப்பத்தின் மூலம் நீரை நீராவியாக்கி அதன் மூலம் சுழலிலிகளைச் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
அணுஉலை செயல்பாடு
அணுப்பிளவு தொடர்ச்சியாக நடைபெறும்போது தோன்றும் வெப்பத்தால் நீர் சூடாக்கப்பட்டு, நீராவியாக மாற்றப் படுகிறது. அந்த நீராவியைக் கொண்டு மாபெரும் சுழலிகள் சுழலச் செய்யப்படுகின்றன. அச்சுழலிலிகளின் சுழற்சியால் மின்இயற்றி மூலம் மின்ஆற்றல் உருவாகிறது. சுலிழலியைச் சுழலச் செய்த பிறகு அந்நீராவி கடல் மற்றும் நதி நீரால் இயங்கும் குளிர்விப்பானால் மீண்டும் நீராக மாற்றப்படுகிறது. அந்நீர் மீண்டும் உலைக்களத்திற்குள் செலுத்தப்படுகிறது. அணுஉலையின் மையப்பகுதி (Reactor Core) மிகுந்த வெப்பத்தால் உருகிவிடும் அபாயத்திற்கு அணுஉலை உருகுதல் என்று அழைக்கப் படுகிறது. முக்கியமான குளிர்விக்கும் குழாய் அடைபடும் போது அல்லது உடைந்து விடும்போது மையப்பகுதியின் வெப்பம் கணிசமாக உயர்ந்துவிடும். அச்சமயங்களில் ஆபத்துகால குளிர்விப்பான் (Coolant) உடனே வேலை செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக இவை வேலை செய்வதில்லை. அக்குளிர்விப்பான்கள் தகராறு செய்யும் போது எரிபொருள் குழாய்கள் (Fuel Rods) முதலிலில் உருகுகின்றன. பின் எரிபொருளே உருகுகின்றது. மையப் பகுதிகள் முழுவதும் சூடான கதிரியக்க வாயுக்களால் சூழப்படுகிறது. உருகிய எரிபொருள் அழுத்தத்தால் எரிகிறது. நீராவி வெடித்துக் கிளம்பி கூரையை உடைத்து உள்ளிருப்பவைகளை வெளியே தூக்கி எறிகிறது. உருகிய யுரேனியம் கீழ்ப்பகுதியை பொசுக்கி பூமிக்குள் இறங்குகிறது. இதில் உள்ள மாபெரும் கதிரியக்க அபாயம் வாயு வடிவத்தில் இருக்கும் அணு பிளவுப் பொருட்கள்தான்.
இப்படிப்பட்ட அணுஉலைக் கசிவுகள் அடிக்கடி ஒரு அணு உலையில் விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இதுதான் ஜப்பானில் இந்தாண்டு மார்ச் 11-ஆம் தேதி நடந்தது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும் அதனைத்தொடர்ந்த அணுஉலை விபத்தும் உலகம் அறியும். இதைப் பற்றிய பொது அறிவு உலகத்தில் (2011 ஏப்ரல் மாத இதழ்) கட்டுரை எழுதி யிருந்தேன். அந்நாட்டில் கடற்கரைக்கு அருகில் புகுஷிமா அணுஉலை விபத்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடுமையான கதிர்வீச்சுக்கு உட்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. புகுஷிமா அணுஉலை விபத்து பல நாடுகளின் அணுஉலைகளை மூடவோ அல்லது அத்திட்டங்களை கைவிடவோ அல்லது பரிசீலிலிக்கவோ ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. ஆக ஒரு அணுஉலையின் கசிவைப் பொருத்தவரை அதிலுள்ள கதிரியக்கத்தால் பல ஆயிரம் மக்களை கொல்ல முடியும்.
கதிரியக்கம் என்றால் என்ன?
நிலையற்ற அணுக்களின் அணுக்கருக்கள் ஒரு நிலையான இடத்தை அடைய முயலும்போது, ஏராளமான ஆற்றல்மிக்க மின்காந்த அலைகளையோ, அதிவிரைவாக பறக்கும் அணுத்துகள்களையோ வெளிப் படுத்தும். இதுவே கதிரியக்கம் எனப்படுகிறது. அப்படி அந்த அணுத் துகள்கள் வெளிப்படும்போது, எதிர்படும் எல்லாவற்றிலும் ஊடுருவும். அதற்கு மனித உடலும் விதிவிலக்கல்ல. நமது உடலிலின் உள்ளே இந்த சிறிய துகள்கள் போனவுடன் நமது செல்களை தாக்குகின்றன. அச்செல்களில் உள்ள மரபுக்கூறுகள் நேரடியாகத் தாக்கப்படும் போது, நமது உடற்கூறு உயிரியல் திட்டம் முழுமையாக நாசமடைகிறது. புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து கொடிய நோய் களும் உருவாகின்றன. கதிரியக்கத்தை கண்ணால் பார்க்க முடியாது. உணர முடியாது. கேட்க முடியாது. நுகர முடியாது. அதை திரும்பிப்போ என்று கட்டளையிடவும் முடியாது. பரவி விட்டால் அதை உணர முடியாது. அவை மனித உடலிலில் நுழைந்து திசுக்களை அழித்து மரபுக் கூறுகளை ஏப்பம் விட்ட பின்னர்தான் தெரியவரும். அதற்குள் காலம் கடந்துவிடும்.
அணுஉலை உருகுவதன் மூலம் கதிரியக்கம் பயங்கரமாக பரவி பேரழிவை உருவாக்கும். இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. அதன் வீரியம் 2,40,000 ஆண்டுகள் வரை கூட மங்காமல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் அது உயிர் உள்ள இனங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் எல்லாவற்றிலும் பரவுகிறது. பல நூறு ஆண்டுகள் கழித்து பிறக்க இருக்கும் குழந்தைகளைக்கூட இது பாதிக்கும்.
கதிரியக்கம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியில் இருந்தது. அவை மெதுவாக மறையத்துவங்கிய பின்னர், பூமியில் உயிர் தோன்றியது. ஆளும் வர்க்கங் களும் ஏகாதிபத்திய நாடுகளும் அணுஉலைகளை நிறுவுதன் மூலம் இந்த பரிமாண வளர்ச்சியை பல கோடி ஆண்டுகள் பின்னோக்கி திரும்ப முயலுகின்றன. வல்லரசு என்ற போதையில் மக்களை பலிகடா வாக்குகின்றன.
அணுஉலை கழிவுகளில் கதிரியக்கம்
அணுஉலை என்றாலே கதிரியக்கம்தான்.கதிரியக்கம் அணுஉலைகளில் அணுவைப் பிளக்கும் போதிலிலிருந்து தொடங்குகிறது. அதை குளிரவைக்கும் நீரில் கலந்து அந்நீர் வெளியேற்றப்படும்போது, தானும் வெளியேறி பரவுகிறது. எரிபொருள் கழிவான புளுட்டோனியம் மற்றும் யுரேனியம் மிகுந்த கதிரியக்கம் கொண்டவை. தேவை யற்றவை என புதைக்கப்படும் கழிவுகளின் கதிரி யக்கத்தின் தன்மை பல ஆயிரம் ஆண்டுகள் வரை அப்படியே நீடிக்கக் கூடியது. அணுசக்தி உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் இந்த அணு கதிரியக்கம் தவிர்க்க முடியாதது. இக்கழிவுகளிலுள்ள கூறுகள் முறையே ரேடியம் -226 , மற்றும் தோரியம்-236. இது போன்ற எண்கள் அணுக்கூறுகளின் தனித்தன்மையை குறிப்பிடுபவை. தோரியம் உள்ள கழிவுள்ள கதிரியக்கம் அதன் பாதி வீரியம் மறைவதற்கு 76000 ஆண்டுகள் ஆகும்.
அமெரிக்காவில் சுரங்கத்தில் தோண்டி எடுக்கும்போது விழுந்த கழிவுத்துண்டுகளை 15 அணைகளில் சேகரித்து வைத்திருந்தனர். 1955-லிலிருந்து 1977 ஆண்டுகளுக்குள் தொடர்ந்து இந்த அணைகள் உடைந்து ரியோ பியர்கோ என்ற ஆறு முழுவதும் கழிவுத்துண்டுகளிலிலிருந்து கசிந்த திரவமானது கலந்து கதிரியக்கம் படர்ந்துவிட்டது. (Tainted Desert Book by Valeriel Kuletz) அமெரிக்காவிலேயே இந்தநிலைமை என்றால் இந்தியாவில் என்ன நடக்கும்? கழிவுகள் குப்பைத் தொட்டியிலோ அல்லது கடலிலிலோ கொட்டப்படலாம்.
இரண்டாவது நிலையில், அணு உலையிலுள்ள கம்பிகள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஆகும் தேய்மானத்திற்காக இராசயனங்களில் சுத்திகரிக்கப் படுகின்றன. கம்பிகலிளுள்ள கதிரியக்கக் கூறுகள் ஸ்ட்ரான்டியம்-90 (Strontium) சீசியம்-137 (Caesium) மற்றும் புளுட்டோனியம் ஆகும். இதில் இரண்டு வகை உள்ள புளுட்டோனியக் கூறுகள் முறையே புளுட் டோனியம்-239 மற்றும் புளுட்டோனியம்-242 ஆகியவை உள்ளன. முதல்வகை புளுட்டோனியத்தின் பாதி வீரியம் மறைவதற்கு 2லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளும், இரண்டாம் வகை புளுட்டோனியத்தின் வீரியம் மறைவதற்கு 3,80,000 ஆண்டுகள் ஆகும். இவ்வகை புளுட் டேனியத்தின் 10 ஆயிரத்தில் ஒரு பங்கை மனிதன் சுவாசித்தால் மரணத்தை விளைவிக்கக்கூடிய புற்றுநோய்கள் உருவாகும். கம்பிகள் இராசயனரீதியாக சுத்திகரிக்கப்பட்டு மறுபடியும் உற்பத்திக்காக யுரேனியமும் புளுட்டோனியமும் பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மிகத் தீவிரமான கதிரியக்கம் கொண்ட கழிவுகள் உருவாகின்றன. இதில் யுரேனியம்-236 கூறுகள் உள்ள கழிவானது 48.4 மில்லிலியன் ஆண்டுகள் அழியாது. இதிலுள்ள கதிரியக்கம் உள்ள ஜோடியம் (Jodium) -129 என்ற கூறில் உள்ள கதிரியக்கமானது 30.14 மில்லிலியன் ஆண்டுகள்வரை இருக்கும். இக்கம்பிகளை சுத்திகரித்த இராசயனமானது திரவக் கழிவாகி விடும்.அவை தொட்டிகளில் பொதுவாக சேமிக்கப்படும். இதிலுள்ள கதிரியக்கம் தொட்டிகளிலிலிருந்து கசிந்தோ வெடித்தோ விபத்துகள் ஏற்படுவது சர்வ சாதாரணமான ஒன்று. அமெரிக்காவில் ஹான்போர்டு விபத்து (1979) மற்றும் ரஷ்யாவில் செர்னோபிள் (1986) விபத்து என பல முன்னுதாரணங்கள் உள்ளன.
அணு மின் நிலையங்கள்-உறைய வைக்கும் உண்மைகள்
கதிரியக்கம் மனித குலத்தை மட்டுமல்ல. இந்த உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த சக்திதான் ஹிரோசிமா மற்றும் நாகசாகி நகரங் களின் பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று சாம்ப லாக்கியது. அதே சக்தி இன்று மின்சாரம் எடுக்க பயன்படுகிறது. எப்படி?
யுரேனியம் என்ற உலோகத்தை எடுத்து அதை சுத்திகரித்து அதிலிருந்து யு-235 கதிரியக்க யுரேனியம் எடுக்கப்பட்டு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் யுரேனியம் (செரிவூட்டப்பட்ட யுரேனியம்) எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும்போது பல கதிரியக்க பொருள்களும் உலோகங்களும் வாயுக்களும் வெளியாகும். அதில் முக்கியமாக சிசியம், ஆர்கான்-41, கிரிப்டான்-35, செனான்-133, அயோடின்-131,கார்பன்-14 ஆகிய கதிரியக்க உலோகங்களும் உற்பத்தியாகின்றன. ஒரு ஆண்டில் செனான்-133 ஆனது 80 கிலோ மீட்டர் வரைக்கும் 01 கதிரியக்கம் ஏற்படுகிறது. ஒரு ஆயிரம் மெகாவாட் அணு மின்உலை ஒரு ஆண்டிற்கு 4 ஆயிரம் கன மீட்டர் திராவகக் கழிவுகளை வெளியிடுகிறது. (கூடங்குளம் அணுஉலையின் செயல்பட்டதால் 8 ஆயிரம் கனமீட்டர் திரவ கழிவு வெளியிடும்.) கதிர் இயக்கப் பொருள்களை ஆல்பா, காமா மற்றும் பீட்டா என்று பிரிக்கலாம். ஆல்பா மனிதனின் செல்களை அழிக்கும். பீட்டா கதிர்கள் புற்று நோயை உருவாக்கும். கதிரியக்கப் பொருள்கள் பூமியில் பறந்து காய்கறி மூலமும் பால் மூலமும் மனிதனை வந்தடையும். 2011 ஏப்ரல் 5-ஆம் தேதி ஜப்பான் உணவுப் பொருள்களுக்கு கதிரியக்க காரணமாக தடைவிதித்தது இந்தியா. உலகில் முதன் முதலில் கதிரியக்கப் பொருட்களுக்கு தடைவிதித்த நாடும் இந்தியாதான். கதிரியக்க பாதிப்பில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும். இவை சுரப்பிகளில் தேங்கி இனப் பெருக்க உறுப்புகளைத் தாக்கும். பெண்களுக்கு மார்பக புற்று நோய், எலும்பு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் நாளமில்லா சுரப்பியான தைராய்டில் புற்றுநோய் வர வழிவகுக்கும்.
அணுஉலை ரகசியமும் விபத்து இழப்பீடும்
அமெரிக்காவில் பிரைஸ் ஆண்டர்சன் சட்டத்தின்படி (Price Anderson Act) அணு மின் உலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 49ஆயிரத்து 266 கோடிகள் நஷ்ட ஈடாக அளிக்கப்படும். இந்தியாவில் அளிக்கப்படும் நஷ்டஈடு ( புதிய சட்டத்தின்படி) வெறும் 1500 கோடிகள் அளிக்கப்படும் (அதிக பட்ச வரம்பு.) அணு மின்சக்தி தயாரிப்பு, அணு குண்டு தயாரிப்பு என்று அணு சம்பந்தப் பட்ட எதனையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது.இந்தியாவின் தகவல் உரிமைச்சட்டம் இதற்கு பொருந்தாது. அரசு அலுவலக இரகசிய சட்டத்தின்கீழ் ( Official Secrecy Act) அணுஉலைகள் வருகிறது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்று எல்லா வற்றிலிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப் பதால் நாடாளு மன்றத்தில்கூட இத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எழுப்ப முடியாது.
ஒரு அணு உலைக்கு அல்லது ஒரு அணுகுண்டு சோதனைக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது? திட்டம் வெற்றியா அல்லது தோல்வியா, பாதிப்புகள் என்ன என்பதை நாட்டின் முதல் குடிமகனிடமிருந்து கடைசிக் குடிமகன் வரை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. சட்டபடியே அதற்கான உரிமை இல்லை. சுருக்கமாக கூறினால் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக ஆட்சிமுறை இங்கு கேலி கூத்தாகிவிட்டது.
அணுசக்தி உலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் கதிரியக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட போவது வரலாறு கண்ட உண்மையாகும். ஸ்காட்லாந்திலுள்ள நதன்சி அணுமின் உலையின் அருகில் வசிக்கும் பெண்களில் 19 ஆயிரம் பேருக்கு சுரப்பி புற்றுநோயும் (Lymphatic Cancer) கர்ப்பப்பை புற்றுநோயும் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ரத்த புற்றுநோயும் மூளைப்புற்று நோயும் அதிகமான விகிதத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.
ஜப்பானிலுள்ள பூக்கூசியா பிரிபெக்சுவல் சுற்றுப்புற சூழல் மருந்து ஆராய்ச்சி நிலையத்திலுள்ள முனைவர் ஜுனிச்சி முறாமோட்டா, தனது அறிக்கையில் அணுமின் நிலையத்தில் இருந்து வரும் தாழ்ந்த அளவு உள்ள கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பும் குரோமோசோம் அழிவும் ஒரு மடங்கு கூடும் என்கிறார். அமெரிக்காவிலுள்ள பிக் ராக் பாய்ண்ட் அணுமின் உலை உள்ள மிக்சிக்கன் ஏரியின் சுற்று வட்டாரத்தில் ரத்த புற்றுநோய் 400 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது 22 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோல சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அருகே வசிக்கும் மக்களிடையே 6 விரல்கள் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி யாளரும் மருத்துவருமான மருத்துவர் ஆர். ரமேஷ் கூறுகிறார். (Applied Radiation and Isotopes Report- 2001) அணுமின் நிலையத்தில் விபத்து அல்லது கோளாறு ஏற்படுவது மிகச்சாதாரணமான நிகழ்வு. விபத்து ஏற்படும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என சர்வதேச பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி நடந்து கொண்டால் மட்டுமே கதிரியக்கத்தின் பாதிப்புக்களை குறைக்க முடியும். ஒரு அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் 140-170 கி.மீ சுற்றளவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட வேண்டும்.
அப்போது கீழ்க்கண்ட பரிந்துரைகள் பின்பற்றப்பட வேண்டும்.:
வெளியேற வேண்டிய நேரமாவது, சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் 6 மணி நேரத்தில் 2.5 கி.மீ; 12 மணி நேரத்தில் - 5.25 கி.மீ; 24 மணி நேரத்தில் - 25.75 கி.மீ; 48 மணி நேரத்தில்- 75 கி.மீ. வெளியேற்றப்பட வேண்டும். இப்படி வெளியேற்றப்பட்ட மக்கள் 170 கி.மீ மேல் உள்ளவர்கள் 3 ஆண்டுக்கு பின்பும் , 77 கி.மீ வரை உள்ளவர்கள் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் தான் திரும்பவர முடியும். கூடங்குளத்திலிருந்து, நாகர்கோவில் 30 கி.மீட்டருக்குள்ளும் தூத்துக்குடி 40 கி.மீட்டருக்குள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1963-இல் நிர்ணயிக்கப்பட்ட வரையறைப்படி அணு மின்உலையிலிலிருந்து 16 கி.மீ தூரத்திற்குள் உள்ள நகரங்களின் மக்கள்தொகை 10 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். 40 கி.மீ வரை ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரஷ்யாவின் விதிகளின்படி அணுமின் நிலையத்தில் இருந்து பெரிய நகரங்கள் 35 கி.மீ தள்ளி இருக்க வேண்டும். அமெரிக்க கணக்குப்படி 20 கி.மீ தூரத்திற்குள் மக்கள்தொகை உள்ள நகரங்கள் இருக்கக் கூடாது. ஆனால் கூடங்குளம் நாகர்கோவிலிலிலிருந்து 30 கி.மீ உள்ளேயே இருக்கிறது. நாகர்கோவிலிலின் மக்கள் தொகை (2001ன் கணக்கெடுப்புபடி) 2.5 லட்சம். அதுபோல கன்னியாகுமரி கூடங்குளத்திலிலிருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரையில் கட்டுப்பாடுகள் காற்றிலே பறக் விடப்பட்டிருக்கின்றன.
அணுமின் நிலையத்திலிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மிக விலை உயர்ந்ததாகும். ""காற்றாலையி லிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.75ஆகும். அனல்மின் நிலையத்திலிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் யூனிட்டிற்கு 6 ரூபாயாகும். ஆனால் அணுமின் நிலையத்தின் முதலீட்டுச் செலவுகள், எரிபொருள், கனநீர், எரிபொருள் சுத்திகரிப்பு, கழிவு அகற்றுதல், உலையை அதன் காலம் முடிந்த பின்னர் அகற்றுதல் மற்றும் பாதுகாப்பு போன்ற செலவுகள் மிக அதிகம் என்பதால் ஒரு யூனிட்டிற்கு 8லிலிருந்து 10 ரூபாய் வசூலிலிப்பது தவிர்க்க முடியாதது ஆகும்'' என்று கூறுகிறார் மின்சாரத்துறை ஆராய்ச்சி யாளரும் டெல்லிலி அறிவியல் கழகத்தின் உறுப்பினருமான பிரபீர் புர்கயஸ்தா. (The New Power Policy By Prabir Purkayastha)
இந்தியாவிலுள்ள அணுசக்தி உலைகளில் ஏற்பட்ட விபத்துகள்
* 1976 - ராஜஸ்தானில் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தவறுகளால் கதிரியக்கம் கலந்த நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
* 1980 - சென்னையில் கல்பாக்கத்தில் உள்ள ஒரு குழாயில் பிளவு ஏற்பட்ட பின்னர் கதிரியக்கம் உள்ள துகள்கள் காணப்பட்டன. (International Journal of Nuclear Energy Science and Technoloy 2005- Vol, No2/3 pp. 148- 163)
* 1988 - கல்பாக்கத்தில் கனநீர் கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் கதிரியக்க பாதிப்புக்கு உள்ளனார்கள்: அணு உலை மூடப்பட்டது. (Out of the Nuclear Shadow- Edited by Smitu Kothari and Zia Mian- Pages 46-47)
* 1992 - ராஜஸ்தானில் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட மொத்தம் 8 குழாய்களில் 4 டன் எடையுள்ள கனநீர் கசிவு ஏற்பட்டது.
* 1993 - நரோரா அணுமின் நிலையத்தில் உடைந்த டர்பைன் பிளேடுகளில் தீ பிடித்ததால் உருகும் நிலை ஏற்பட்டது.
* 1994 - கைகாவில் கான்கீரிட் சிமெண்டால் போடப்பட்ட கோபுரம் போன்ற அமைப்பு கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்தது.
* 1995- தயாநிதி மற்றும் கந்தசாமி இருவரும் கல்பாக்கத்தில் 50 தடவைக்குமேல் காமா கதிரியக்கம் உள்ளதை கண்டறிந்தனர்.
* 1999- மார்ச் 26 கல்பாக்கம் K5 Unit -இல் (MAPS II) கனநீர் கசிவினால் 7 பணியாளர்கள் முழுமையான கதிரியக்கத்திற்கு உள்ளானார்கள்.
* 1999 - கல்பாக்கத்தில் கனநீர் கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் கதிரியக்க பாதிப்பிற்கு உள்ளானார்கள். (Fronline- 1999- April 10-23, Volume 16- Issue 8)
* 1999 - தாராபூரில் ரப்பர் குழாய்கள் மோசமானதால் உலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
* 2001- மே 30-இல் எஸ். சிவகுமார் என்ற பணி யாளர் கதிரியக்கத்திற்கு ஆளானார்.
* 2001- ஜூலை 7-இல் செல்வகுமார் என்ற பணியாளரின் இடதுகை எரிபொருளை கையாளும்போது எரிந்து போனது.
* 2002- டிசம்பர் 19-இல் மதுசூதனன் மற்றும் ராஜன்ஆகியபணியாளர்கள்முழுமை யான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
(ஆதாரம்: டெகல்கா இதழ்- 2010- டிசம்பர் 11, யர்ப், Vol, No7 Issue 36)
* 2001 - ராஜஸ்தானில் டர்பைன் பிளேடு முனை மழுங்கியது, வெப்பத்தை மிதமாக்கும் கருவியின் பல ரப்பர் குழாய்களிலும் கசிவு மற்றும் மூடிகளில் முடியும் இடத்தில் பிளவுகள் ஏற்பட்டன.
* 2009 - கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகாவில் தொழிலாளர்கள் பருகிய குடிநீரில் கதிரியக்கம் இருந்ததால் 50 தொழிலாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். (DNA)2009 நவம்பர் 29 இதழ்) ஊடகம் இதை சதி என்றும், அணு உலையின் அதிகாரிகள் இது தொழிலாளர்கள் கவனக்குறைவினால் ஏற்பட்ட விளைவு என்றும் கூறினர். பிரதமர் மன்மோகன்சிங் கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இது மிகச்சிறிய கலப்படம்தான் என்றார். இறுதிவரை பாதிக்கப்பட்ட தொழி லாளர்களின் பெயர்களோ அவர் களின் உடல்நிலை பற்றியோ எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிகழ்வு குறித்த அனைத்து தகவல்களும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய உள்ளன. கட்டுரையின் அளவு கருதி குறைத்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவில் மூன்று மைல் தீவு என்ற இடத்தில் நிகழ்ந்த அணுஉலை விபத்தில் அதை சுத்தம் செய்ய 1 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது. பாதிப்பு நிகழ்ந்த 30 கி.மீ. சுற்றளவை சுத்தம் செய்ய 14 ஆண்டுகள் ஆகின. விபத்து தீவில் நிகழ்ந்ததால் ஒரளவுக்கு உள்நாட்டில் கதிரியக்கம் பரவாமல் தடுக்கப்பட்டது. இதேபோல் இந்தியாவில் நிகழ்ந்தால் பலபகுதிகளில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டுள்ளதால் பாதிப்புகள் நினைத்து பார்க்க முடியாதபடி இருக்கும். இந்த அளவு நிதியை அரசு ஒதுக்கீடு செய்யுமா? இந்தியச் சூழ்நிலையில் இத்தனை ஆண்டுகள் சுத்தம் செய்வதற்கு ஒதுக்கப்படாது- அது மட்டுமின்றி உடனடியாக சில மாதங்களிலோ சில நாட்களிலோ அணு உற்பத்தி தொடங்கப்படும் என்பதும் நிச்சயம். இன்று உலகளவில் அதிக நோயாளிகள் நிறைந்த நாடு, சுகாதார கேடுகள் நிறைந்த நாடு இந்தியா என்ற ஐ.நா. அறிக்கையுடன் தொடர்புபடுத்திப் பாருங்கள் புரியும்.
அணுஉலைகளை கொண்டாடும் இந்தியா
இந்திய அரசியல் சட்டம் கூறும் பிரிவு 21 உயிர் வாழும் உத்திரவாதத்திற்கும் (Article 21. Protection of life and Personal Liberty) அணுஉலை சட்டம் முழுமையாகவே எதிரானது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சுனாமியும் அதனைத்தொடர்ந்து அணு உலை விபத்தும் உலகம் முழுவதும் கடும் அதிர்வு களை ஏற்படுத்தியுள்ளன.அந்நாட்டில் கடற் கரைக்கு அருகில் புகுஷிமா அணு உலை விபத்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடுமையான கதிர்வீச்சுக்கு உட்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. (சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அறிக்கை ஜூன்- 2011)
புகுஷிமா அணுஉலை விபத்து பல நாடுகளின் அணு உலைகளை மூடவோ அல்லது அத்திட்டங்களை கைவிடவோ அல்லது பரிசீலிலிக்கவோ ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. அணுஉலை விபத்து ஏற்பட்ட ஜப்பானில் மொத்தம் இருந்த 54 அணுஉலைகளில் 37 உலைகளை மூடவைத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி கொள்கையானது மறுபரிசீலிலனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து புது உலைகளை கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது. ஜெர்மனியானது 17 உலைகளை கலைப்பதை தாமதிப்பது என்ற முடிவை தள்ளிப்போட்டுள்ளது. சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸில் கட்டுவதாக திட்டமிடப் பட்டிருந்த இரண்டு பெரிய உலைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இத்தாலிலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் 95 விழுக்காடு மக்கள் அணுஉலைகள் அமைப்பதை எதிர்த்துள்ளனர். பிரான்சில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 62 விழுக்காடு மக்கள் உடனடியாக அணுஉலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 15 விழுக் காடு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
ஐரோப்பிய நாடுகளில் இன்னும் செர்னோபிள் அணு உலை விபத்தின் அதிர்ச்சியிலிலிருந்தே மீளாத நிலை உள்ளது. அணுஉலைக் கம்பெனியான அரெவா (Areva) திவாலாகும் நிலையில் உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இக்கம்பெனியின் உலைகள் தோல்வியடைந்துவிட்டன. இது தொடர்பாக கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்திய அணுமின் கழகம் (NPCIL) அரொவாவுடன் 25 வருடங்களுக்கு எரி பொருள் ஒப்பந்தத்தை செய்து அக்கம்பெனியை லாபத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 9 மாத காலமாக அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவில் கடந்த 1973 லிலிருந்தே எந்த புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை. இதெல்லாம் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் ஜப்பான் அணு உலை விபத்தின் தாக்கத்தி னால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் . ஆனால் இந்தியாவில் எந்தவித சிறு சலனத்தையும்கூட ஆட்சியாளர்கள் மத்தியில் இந்த விபத்து ஏற்படுத்தவில்லை. அதற்குமாறாக, இருக்கின்ற அணு உலைத் திட்டங்கள் விரிவாக்கப்பட உள்ளன. புதிய திட்டங்களும் வர விருக்கின்றன.
அணுசக்தி குறித்த அனைத்து விஷயங்களுக்கும் நிறுவனங்களுக்கும் பெருங்குடை போன்ற அமைப்பாகத் திகழ்கின்ற அணுசக்தி கழகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லாமல் இரகசியமாகவே உள்ளன. அணுசக்தி ஒழுங்குபடுத்தும் வாரியத்தின் பணி அனைத்து அணுஉலைகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்துவதுதான். கதிரியக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு களையும் அதிலிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து பொது மக்களுக்கு தகவல் அளிப்பதும் இந்த அமைப்பின் முக்கிய பணியாக உள்ளது. ஆனால் அந்த பணியினை மேற்கொள்ளாமல் அலுவலக ரகசிய சட்டத்தை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் தேசபாதுகாப்பு என்று கூறி தரமறுக்கிறது. அணு உலை களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்பட அனைத்தையும் ரகசியமாகவே பாவிக்கிறது.
அணுசக்தி உலைகள் யாருக்கும் கட்டுபடாதவை. நாட்டின் உயரிய ஆட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில்கூட அணுஉலையின் செயல்பாடுகள் அதன் முதலீடு செலவுகள் மற்றும் அங்கு நடக்கும் விபத்துகள் குறித்து பேச முடியாது. எந்த மக்கள் பிரதிநிதியும் அவ்வளவு ஏன் அமைச்சர் கூட கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் ஜனநாயகத்துடன் செயல்படுவதற்கு அங்கு இடமில்லை. எல்லாவற்றையும் நாட்டின் பாதுகாப்பு என்பதற்குள் அடக்கி சர்வதிகாரத்துடன் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளை திறந்த வெளிப்படையான அமைப்பாக செயல்படவைக்க 1993-இல் அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிருந்தே போரட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக அமைப்பை ஒரளவுக்கு வெளிப்படையாக செயல் படவைத்தார். சில காலம் வெளிப்படையாக செயல்பட்டதால் அணு உலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் வெளியே தெரியவந்தன.
1995-இல் இவ்வமைப்பு பாதுகாப்பு குறித்த ஒரு கணக்கு தணிக்கையை நடத்தியது. அறிக்கையாக சமர்ப் பிக்கப்பட்ட இந்த தணிக்கையில் அணு உலைகளில் உள்ள 134 பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. இதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய 95 பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. இந்த அறிக்கையை வெளியிட மக்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்த னர். அறிக்கையை வெளியிட்டால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அணுஉலை அமைப்பு மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அணுஉலை கழகத்தின் தேசிய பாதுகாப்பு வாதமானது உறுதி செய்யப்பட்டது.
அணு உலைக்கழகமானது 134 பாதுகாப்பு பிரச்சினைகளில் 119 பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறினாலும் இதில் முதன்மையாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. முக்கியமாக கோபால கிருஷ்ணன் அறிக்கை அணுசக்தி உற்பத்திக்கு பின்னர் மூல எந்திரங்களை குளிர்விக்கும் அமைப்புகளில் கடுமையான குறைபாடுகளும் பலவீனங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்சினையால்தான் புகுஷிமாவில் பேரழிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா அணுஉலைகளிலும் பேரழிவை விளைவிக்கும் கதிரியக்க அபாயத்தை தவிர்க்க முடியாது. அதன் கழிவுகளை பூமிக்கு அடியில் எத்தனை அடி ஆழத்தில் புதைத்து வைத்தாலும் அந்த கழிவுகளில் உள்ள கதிரியக்கமானது பல ஆயிரம் ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அணு உலை கழிவுகளை என்ன செய்வது? என்ற பிரச்சினை உலகம் முழுவதும் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில் அணுஉலை கழிவுகளை பாதுகாப்பது ஒரு பிரச்சினையே இல்லையென டாக்டர் அப்துல் கலாம் கூறியது நகைப்புக்குரியது.
அணு உலைக் கழிவுகளை பராமரிக்கும் செலவு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதால் மட்டுமே பல நாடுகளில் அணுஉலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அணுஉலைகளில் உற்பத்தியில் ஒவ்வொரு கட்டத்திலும் கதிரியக்க கசிவுகளும் தவிர்க்க முடியாதது. ஜப்பானில் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை விபத்திற்கு பின்னர் உடனடியாக அரசு அதிகாரிகள் 2 இலட்சம் மக்கள் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனித்தனியாக கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டனரா என்று பரிசோதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் இப்படிப்பட்ட விபத்துகள் அணு உலைகளில் நிகழ்ந்தால் இங்கு அவற்றை எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது?
இங்கு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்தும் தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவைத் தொடர்ந்தும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டமும் பேரிடர் மேலாண்மை அமைப்பும் அதற்கான வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டன. தேசிய அளவிலும் மாநில மற்றும் மாவட்ட அளவிலும் பேரிடர்களை எதிர்கொள்ள அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பயிற்சிகளும் பேரிடர் களை எதிர்கொள்வதற்கான ஒத்திகைகளும் நடத்தப் பட்டன. சுனாமிக்கு பின்னர் சிலகாலம் வரை நடைபெற்ற இவை இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க இத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்களோ மருத்துவமனைகளோ இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம். உலக நாடுகளே அணு உலைகள் வேண்டாம் என்று முடிவு செய்த பின்னரும் இந்தியா விடாப்பிடியாக அணு உலைகள் என்ற பெயரில் உயிருடன் விளையாடுவது மத்திய அரசின் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது. உலகில் மக்கள் சக்தியை தாண்டிய பெரியதொரு சக்தி கிடையாது. வரலாறுகளையும், அரசியலையும், ஆட்சியையும் மாற்றிக்காட்டியது மக்கள் சக்தி மட்டுமே.
எஸ்.செல்வராஜ்
நண்பர்களே ஒட்டு போட்டு செல்லுங்கள் நன்றி நன்றி ..................
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....