தீவிர அரசியலில் களமிறங்க போகிறேன் : கனிமொழி
2ஜி ஸ்பெக்ரம் முறைகேட்டு வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தீஹார்
சிறையில் இருந்த கனிமொழி பிணையில் விடுதலை ஆன பின்னர் நேற்று முன் தினம் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. திமுக தலைவர் மு.கருணாநிதி அவரது மனைவி தயாளு அம்மாளுடன் சென்னை விமான நிலையத்தில் சென்று கனிமொழியை நேரில் வரவேற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று கனிமொழி அவரது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, அவர் தெரிவிக்கையில்
2ஜி வழக்கை கழகமும், நானும் சரியான முறையில் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறோம். கட்சிக்கும், எனக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீதி மன்றத்தில் சட்டப்படி சந்தித்து இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவேன் என்றார்.
இனி தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு, எனது தந்தை என்னை அரசியலுக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அந்த அளவுக்கு நிச்சயமாக தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவேன் என்று பதிலளித்தார்.
மேலும், திமுகவில் தனக்கு முக்கிய பதவி அளிப்பது குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்த அவர், அப்பாவும் கணவரும் தான் சிறையில் இருந்த போது மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். திமுக தொண்டர்கள் அளித்த வரவேற்பு அந்த வருத்தத்தை போக்கும் மருந்தாக இருந்தது என்றார்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....