தி.நகரில் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற ஐகோர்ட் மறுப்பு
சென்னையில் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கன்ஸ்யூமர் சிவிக் ஆக்ஷன் அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த வழக்கின் தொடர்ச்சியாக சென்னையில் பல கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. தியாகராயநகர் உட்பட சில இடங்களில் உள்ள 28 கடைகள், கட்டிடங்கள்,
விதிமுறை மீறி கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) `சீல்' வைத்துவிட்டன.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம், உஸ்மான்சாலை வியாபாரிகள் சங்கம் மற்றும் சில தனி கடைகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் அல்டாப் அகமது, அரிமா சுந்தரம், என்.ஆர்.சந்திரன், ஜி.ராஜகோபாலன், பி.எஸ்.ராமன் உட்பட பலர் ஆஜரானார்கள்.
சுந்தரம், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக ஒவ்வொரு அரசும் வெவ்வேறு நிலைப் பாட்டை எடுக்கின்றன.
இந்த பிரச்சினை தொடர்பாக 2007-ம் ஆண்டு மோகன் கமிட்டி அமைக்கப்பட்டது. அரசுக்கு அந்த கமிட்டி பரிந்துரை ஒன்றை அளித்தது.
அதில், தியாகராயநகரில் வியாபாரம் மிகவும் பெருகிவிட்டது. எனவே அந்தப் பகுதியை வர்த்தக பகுதியாக அறிவித்து விடலாம். எனவே அங்குள்ள கட்டிடங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பரிந்துரை தொடர்பாக அரசு தனது கொள்கை முடிவை அறிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் அரசும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் கோர்ட்டு உத்தரவின் நிர்ப்பந்தத்தினால் இதுபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.
கன்ஸ்யூமர் அமைப்பின் சார்பில் வாதிட்ட மோகன், `சீல்' வைக்கப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். வழக்கின் தற்போதைய நிலையில் `சீல்'களை அகற்ற உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதுபற்றி வழக்கின் இறுதியில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், மனுதாரர்கள் தங்களின் வாதத்தை மனுவாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....