700 கோடியாவது குழந்தையை எதிர்பார்த்து..

உலகின் மொத்த சனத்தொகை 700 கோடியைத் தாண்டவிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதாவது ஒக்டோபர் 31 ஆம் திகதி உலகின் 700 கோடியாவது குழந்தை பிறக்கவிருக்கிறது.
இந்தக் கணக்குப் படி பார்த்தால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலப்பகுதியில் உலகின் சனத்தொகை 200 கோடியால் அதிகரித்திருக்கிறது.
இந்த அனைத்து சனத்தொகை அதிகரிப்பும் பெரும்பாலும் குறைவாக வளர்ச்சிகண்ட நாடுகளிலேயே நடந்திருப்பதால், இந்த சனத்தொகை அதிகரிப்பென்பது உலக வளப் பற்றாக்குறை குறித்த கவலைகளில் பலரது கவனத்தை குவிக்கச் செய்துள்ளது.
700 கோடியை உலக சனத்தொகை கடக்கவிருக்கின்றது என்ற இந்தக் கணக்கெடுப்பு ஐ.நா கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. அதேவேளை இந்த முக்கிய தருணத்தை, சனத்தொகை பெருக்கத்தின் போக்குகளை கணக்கெடுக்கவும் ஐநா பயன்படுத்ததுகிறது.
இப்போது உள்ள பெரிய கேள்வி என்னவென்றால், இந்த அதீத சனத்தொகைப் பெருக்கத்தை எவ்வளவு காலத்துக்கு இந்த உலகத்தினால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதாகும்.
உண்மையில் கடந்த 6 தசாப்தங்களில் உலகின் குழந்தை உற்பத்தி வீரியம் என்பது அரைவாசியாகக் குறைந்திருக்கிறது. அதாவது ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற வீதத்தில் இருந்து அது ஒரு பெண்ணுக்கு இரண்டரைக் குழந்தை என்ற வீதத்துக்கு குறைந்துள்ளது.
ஆனால், இன்றும் ஒவ்வொரு வருடமும் ஏழு கோடியே எண்பது லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அநேகமாக இவை அனைத்தும் பிறப்பது வளரும் நாடுகளில்தான்.
வறுமை, கல்வியறிவு மற்றும் வருமானம் போதாமை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான வழி முறைகள் போதாமை ஆகிய காரணங்களினால் இத்தகைய நாடுகளில் உள்ள பெண்கள் பெருமளவு குழந்தைகளைப் பிரசவிக்கிறார்கள்.
அதுமாத்திரமன்றி அந்தப் பெண்களும், அவர்களது குழந்தைகளும் மோசமான சுகாதாரம், இளவயதிலேயே இறத்தால் ஆகிய பிரச்சினைகளையும் பெருமளவில் எதிர்கொள்கிறார்கள்.
ஆகவே ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை ஐநா வலியுறுத்துகிறது.
இவை எல்லாம் சரியாகக் கிடைத்தால் ஐரோப்பாவைப் போல அனைத்தும் தானாகவே வறிய நாடுகளிலும் சரியாகிவிடும் என்று ஐநா எதிர்ப்பார்க்கிறது.
அதேவேளை உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் ஐநா கூறுகிறது. அதாவது 20 வீதமான செல்வந்தர்கள், உலக மொத்த வருமானத்தில் 77 வீதத்தை தாமே பெற்றுக்கொள்கிறார்கள்.
உலக வளத்தை பெருக்குவதை மாத்திரம் கவனத்தில் கொள்ளாமல் அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இது கோடிகாட்டுகிறது
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....