கடாபி மகன் சைப் அல் இஸ்லாம் கைது: விடுவிக்க 2 பில்லியன் டாலர் பேரம்!
திரிபோலி: தலைமறைவாக இருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் பாலைவனத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் முகம்மது அல் அலாகி தெரிவித்துள்ளார்.
கடாபிக்கு அடுத்து லிபிய அதிபராக சைப் அல் இஸ்லாம்(38) தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது தந்தைக்கு எதிராக புரட்சி வெடித்ததையடுத்து சைப் கடந்த அக்டோபர் 19ம் தேதி பாலைவனப் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த ஒரு மாதமாக லிபியாவின் புதிய அரசு சைப் அல் இஸ்லாமை வலைவீசித் தேடி வந்தது. இந்நிலையில் சைபும், அவரது உதவியாளர்கள் 2 பேரும் சஹாரா பாலைவனத்தில் உள்ள ஒபாரி நகர் அருகே சென்று கொண்டிருக்கையில் போராளிகள் கையில் சிக்கினர். அவர்கள் நைஜருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது தான் பிடிபட்டனர்.
தன்னை விடுவித்தால் 2 பில்லியன் டாலர் தருவதாக போராளிகளிடம் சைப் பேரம் பேசியதாக அஸ் சிந்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் போராளிகள் சைபின் வலையில் சிக்கவில்லை. மாறாக அதை அவமானமாகக் கருதியாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் சைப் அல் இஸ்லாமிற்கு எதிராக கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடாபி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்துக் கொல்லப்பட்டார். அவரது மகன் முதாசிம் கடாபியும் அந்த தினமே போராளிகளால் கொல்லப்பட்டார். கடாபியின் உடல் ரகசியமான இடத்தில் புதைக்கப்பட்டது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....