'மரம் வளர்ப்பில் அறிவியல் அணுகுமுறை'



( நொய்யல் பாதுகாப்பு அமைப்பு )
என்ற தலைப்பில் திரு.நிக்கோடமஸ்(On Osai Enviro Meet)., வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு மைய முதுநிலை ஆராய்ச்சியாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பேசுபவர்கள் எல்லோரும் முதலில் செய்யும் பணி மரக்கன்றுகள் நடுவதுதான். ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நடுகின்றனர். எந்த வகையான மரங்களை நட வேண்டும், எந்த இடத்தில் நட வேண்டும், நட்ட மரங்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. இடம் கிடைத்தால் போதும் கிடைத்த மரங்களை நடுகின்றனர். நட்ட மரக்கன்றுகள் எத்தனை மரங்கள் வளர்ந்துள்ளன என்பதை கணக்கிடுவதில்லை.


நான் இப்படி சொல்வதால் மரக்கன்றுகள் நடுவோரின் செயலை குறை கூறுவதாக கருதக்கூடாது. அவர்களின் உழைப்பும், நல்ல சிந்தனையும் வீணாகாமல், பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன். எந்த மரம் எங்கு வளரும் என்று அறிதல் மிக முக்கியம். தேவை அறிந்தும், சரியான இடத்திலும் மரக்கன்றுகள் நடப்படவேண்டும். அதற்கு முறையான வளர்ப்பு முறை அவசியம்.

நான்கு மாதத்தில் அறுவடை செய்யும் பயிரை, விளைவிக்க நாம் எடுத்துக்கொள்ளும் அக்கறையில் பாதி கூட, பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை நடுவதில் காட்டுவதில்லை.

நகர விரிவாக்கத்தையும், சாலை விரிவாக்கத்தையும் எப்படி தடுக்க முடியாதோ, அதே போல் அதற்கு தடையாக இருக்கும் மரங்களை வெட்டுவதையும் தடுக்க முடியாது. மரக்கன்றுகள் நடுவதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். கோவையில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களே இதற்கு உதாரணம்.

அந்த நிலை இப்போது நட்டுள்ள மரங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் வரக்கூடாது என்ற தொலை நோக்கோடு செயல்படுவது நல்லது.

நகரங்களில் நடவேண்டிய மரங்களை போலவே வெட்ட வேண்டிய மரங்களும் இருக்கின்றன. காட்டில் வளரும் மரங்கள் எவ்வளவு புயல் அடித்தாலும் அதன் கிளைகள் உடைவதில்லை. ஆனால், நகரங்களுக்குள் நடப்பட்டுள்ள மரங்கள் லேசான காற்று மழைக்கே உடைந்து விழுந்து வாகனங்களை சேதப்படுத்துகின்றன. மரங்களை நடுவதிலும், வெட்டுவதிலும் விழிப்புணர்வு தேவை. அதனால், துறை சார்ந்த அறிஞர்களை அணுகி ஆலோசனை பெற்ற பின் மரங்களை நடவேண்டும். மின் கம்பங்கள் அருகே மரம் நடுவதை தவிர்க்கலாம், அல்லது மெதுவாக வளரும் உயரம் குறைவான மரங்களை நடலாம்.

வெட்டுவதற்காகான மரங்களை வளப்பதும் அவசியம். காரணம் காகிதம் மற்றும் மரப்பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 5000 கோடி ரூபாய்க்கு மரப்பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த அளவை குறைக்க வேண்டும் என்றால் நம் தேவைக்கான மரங்களை வளர்த்து வெட்ட வேண்டும். அது விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், தேவையில்லாத மரங்களும், செடிகளும் நம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. அதை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.



                                                                                                 நன்றி :  நொய்யல் பாதுகாப்பு அமைப்பு

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்