தமிழகம் கேரளத்தை விட 'சஸ்ய சியாமள கோமளமா'க இருக்கிறது

தமிழகம் கேரளத்தை விட 'சஸ்ய சியாமள கோமளமா'க இருக்கிறது - சுகுமாரனின் 'வேழாம்பல் குறிப்புகள்' 

தமிழ் நாட்டைப் பற்றி மலையாளிகள் எழுதும்போது - அவர் எவ்வளவு
பெரிய எழுத்தாளராக இருந்தாலும் - அரை குறையான தகவல்களும்
பாதி உண்மைகளும் மட்டுமே வெளிப்படுவது வழக்கம்.தமிழக நிலக்
காட்சி பற்றிய மலையாளியின் வர்ணனை பெரும்பாலும் அபத்தமானது.
அவர்களது சித்தரிப்பில் தமிழகம் ஒரு வறண்ட

பாலைவனம்.பசுமையே
தென்படாது.அங்கிருக்கிற மக்களுக்கு சுகாதார உணர்வு குறைவு.குளிக்க
மாட்டார்கள்.அவர்கள் மீதுவியர்வை நாறும்.இத்தியாதியாகவே மலையாளியின்
தமிழக தரிசனம் இருக்கும். விதிவிலக்காக நான் அறிந்த எழுத்தாளர்
சக்கரியா மட்டுமே.தமிழ் வாழ்வின் மேன்மைகள் பற்றி அவர் மட்டுமே
அவ்வப்போது சரியாக உண்மையாக எழுதியிருப்பவர்.

மலையாள இலக்கியவாதிகளும் திரையுலகினரும் அடிக்கடி தமிழ் நாட்டுக்குள்
வந்து போகிறவர்களாக இருந்தும் இந்தக் கோணல் அபிப்பிராயம் எப்படி
உருவானது என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.அதற்கு விடை
கிடைத்தது எம்.வி.தேவன் எழுதிய கட்டுரையில்.

எம்.வி.தேவன் மூத்த ஓவியர்.சென்னைக் கலை கைவினைக் கல்லூரியில்
பயின்றவர்.சிந்தனையாளர்.விமர்சகர்.அவருடைய 'தேவ ஸ்பந்தனம்'
என்ற கட்டுரை நூல் வெகுவாகப் பாராட்டுப் பெற்றது.விரிவாகப் பேசப்
பட்டது.

'கலாகௌமுதி' வார இதழில் தேவன் எழுதிய கட்டுரையில்தான்
மலையாளிகளின் பார்வைக் கோளாறுக்கான காரணத்தைக் கண்டுபிடித்தேன்.
மலையாளிகள் தமிழகப் பயணத்துக்காகத் தேர்ந்தெடுப்பது இரண்டு
ரயில்களை.ஒன்று: சென்னை மெயில்.இரண்டாவது: ஆலப்புழை
எக்ஸ்பிரஸ்.இரண்டும் தமிழக எல்லைக்குள் பிரவேசிக்கும்போது
இரவு நேரமாகி விடும்.அதனால் அவர்கள் பார்ப்பது இருண்ட தமிழகத்தைத்
தான்.தேவனும் இதுநாள் வரை அப்படித்தான் பயணம் செய்தாராம்.
சமீபத்தில் இந்த இரண்டு வண்டிகளிலும் டிக்கெட் கிடைக்காமல் ஹௌரா
மெயிலில் பயணம் செய்திருக்கிறார்.அது பகல் வெளிச்சத்தில் தமிழகத்தை
காட்டியிருக்கிறது.அதில் வியந்துபோயிருக்கிறார் அவர்.'அற்புதம் என்று
சொல்வேன்.பத்துப் பதினெட்டு ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்குள்
இருட்டில் பயணம் செய்த நான் பகலில் பார்த்த தமிழகம் கேரளத்தை
விட 'சஸ்ய சியாமள கோமளமா'க இருக்கிறது.' (சஸ்யம்- பசுமை,
சியாமளம் - கருமை,கோமளம் - அழகு) என்று குறிப்பிடுகிறார்.

அந்தக் கட்டுரையின் முடிவு வரிகள் என்னை பெருமிதமாக உணர
வைத்தன.அந்த வரிகள்: '' ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைத்தால்
பூமியை ஈரமாக்கி மண்ணை சௌபாக்கியவதியாக்கி அதிலிருந்து
காயும் கனியும் உற்பத்தி செய்கிற தமிழ்மக்களை நாம் அசுத்தமானவர்கள்
என்று அழைக்கிறோம்.காலையில் குளித்து சந்தனம் தீற்றிக்கொண்டு
தமிழனின் வியர்வை ஊறிய அரிசியையும் காய்கறியையும் உண்டு
வயிற்றைப் பெருக்கவிட்டுக்கொள்ளும் மலையாளி ,தமிழனின்
பூந்தோட்டத்திலிருந்து பறித்த பூக்களால் தேவதைகளையும் மனிதக்
கடவுள்களையும் அர்ச்சிக்கிறான்.மலையாளியைப் போல நாறிப்போனவன்
இந்த பூமியில் உண்டா?''

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்