88 பேரை பலிவாங்கிய மருத்துவமனை மீது மம்தா அதிரடி : கோல்கட்டாவில் அதிகாலை நடந்த கோர தீ விபத்து


கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 88 பேர், பரிதாபமாக மூச்சுத் திணறியும், உடல் கருகியும் பலியாயினர். உரிய தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள், விதிமுறைகளை மேற்கொள்ளாததற்காக, மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகிகள் ஆறு பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.


தெற்கு கோல்கட்டாவில் உள்ளது, தகுரியா என்ற பகுதி. இங்கு ஏ.எம்.ஆர்.ஐ., என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. மிக குறுகிய சாலைகள், நெருக்கமான கட்டடங்களுக்கு மத்தியில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 190 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில், நேற்று முன்தினம் 160 நோயாளிகள், பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 60க்கும் மேற்பட்டோர், தீவிர சிகிச்சைப் பிரிவு, மிக தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
தீ விபத்து : நேற்று அதிகாலை 3.30க்கு, இந்த மருத்துவமனையின் அடித்தளத்தில், திடீரென தீப்பற்றிக் கொண்டது. அந்த நேரத்தில் நோயாளிகளும், மற்றவர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், தீப்பற்றிய சம்பவம், யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரத்தில், மருத்துவமனை முழுவதும் புகை மண்டலத்தால் சூழப்பட்டது.
வெளியேற முடியவில்லை : மருத்துவமனையின் மற்ற தளங்களுக்கும், தீ வேகமாக பரவியது. இந்த தகவல், மருத்துவமனை ஊழியர்கள் சிலருக்கு தெரியவந்ததும், அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். டாக்டர்கள், நிர்வாக அதிகாரிகள், நோயாளிகள் என, அனைவருக்கும் இந்த தகவல் பரவியது. அனைவரும் கட்டடத்தை விட்டு வேகமாக வெளியேற முயற்சித்தனர். ஆனாலும், தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பெரும்பாலானோரால் வெளியேற முடியாமல் போய் விட்டது.
நோயாளிகள் பரிதாபம் : தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், கால்களில் அடிபட்டு, அதற்காக சிகிச்சை பெற்றவர்களால், எழுந்திருக்கவே முடியவில்லை. இதனால், சிகிச்சை பெற்று வந்த அறைகளுக்குள்ளேயே, மூச்சுச் திணறி, அவர்கள் உயிரிழந்தனர். மற்றும் சிலர், தீயில் கருகி உயிரிழந்தனர். பலர், கட்டடத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் : சிறிது தாமதத்துக்குப் பின், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த, 250க்கும் மேற்பட்ட வீரர்கள், மருத்துவமனையின் நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தீ வேகமாக பரவியதால், தீயணைப்பு வீரர்களால் கயிற்று ஏணி மூலம், மருத்துவமனையின் மேல் உள்ள தளங்களுக்குச் செல்ல முடியவில்லை.
கிரேன் : இதைத் தொடர்ந்து, ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. மிக உயரமான டிராலிகளும் கொண்டு வரப்பட்டன. புகை அதிகமாக இருந்ததால், முகமூடி அணிந்து கொண்டு, தீயணைப்பு வீரர்கள் அதில் சென்றனர். 
மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.
கயிற்றில் உடல்கள் : மூச்சுத் திணறி இறந்த பலரின் உடல்களை, கயிற்றில் கட்டி கீழே இறக்கினர். பல மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயை அணைத்தாலும், அதிலிருந்து வெளியேறிய புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
88 பேர் பலி : மருத்துவமனையில் இருந்த 160 நோயாளிகளில், 85 நோயாளிகள் பலியாகி விட்டதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் பலியாகி விட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த பலர், அருகில் உள்ள எஸ்.எஸ்.கே.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உரிமம் ரத்து : தீ விபத்து நடந்த இடத்துக்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, மீட்பு பணிகளை பார்வையிட்டார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறியதாவது: தீ விபத்தால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். என்னால் பேச முடியவில்லை. மருத்துவமனையில் போதிய அளவில் தீ விபத்து தடுப்பு உபகரணங்கள் இல்லை என்றும், தீ விபத்து தடுப்பு விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், இது மன்னிக்க முடியாத குற்றம். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மம்தா கூறினார்.
6 பேர் கைது : தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகிகள் ஆர்.எஸ். கோயங்கா, எஸ்.கே.டோடி, ரவி கோயங்கா, மனிஷ் கோயங்கா, பிரஷாந்தா கோயங்கா, தயானந்த அகர்வால் ஆகிய ஆறு பேர், கோல்கட்டா லால் பஜார் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று மாலை சரண் அடைந்தனர். 
இவர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின், ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்துக்கு காரணம் என்ன? : மருத்துவமனையின் அடித்தளத்தில் உள்ள பகுதியை, கார் பார்கிங்காக பயன்படுத்தியதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோல்கட்டா மாநகராட்சி அதிகாரிகள், இதை மறுத்துள்ளனர். 
அவர்கள் கூறுகையில், "மருத்துவமனையின் அடித்தளத்தில் உள்ள பகுதியில், உபயோகப்படாத மருத்துவ உபகரணங்கள், பயனற்ற மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அதிக அளவில் இருந்தன. இங்கு தான், முதலில் தீப்பிடித்துள்ளது. இதன்பின், மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக் குறைவு காரணமாகவே, தீ விபத்து ஏற்பட்டது' என குற்றம் சாட்டினர்.
தீயணைப்பு வண்டிகள் தாமதமா? : மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த நோயாளி ஒருவர் கூறுகையில், "அதிகாலை 3.30க்கு, தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனாலும், இரண்டு மணி நேர தாமதத்துக்கு பின்தான், தீயணைப்பு வண்டிகள் அங்கு வந்தன. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் வந்திருந்தால், தீ அதிகம் பரவும் முன் அணைத்திருக்கலாம். மேலும், பல உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்' என்றார். இதை மறுத்த தீயணைப்பு அதிகாரிகள், "எங்களுக்கு தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அங்கு சென்று விட்டோம்' என்றனர்.
கோல்கட்டா தீ விபத்தில் இறந்தவர்களுக்கு, லோக்சபாவில், நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் துக்கத்தை பகிர்ந்து கொள்வதாக, சபாநாயகர் மீரா குமார் கூறினார்.
தீ விபத்தில் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு அளிப்பதாக, மேற்கு வங்க மாநில அரசு அறிவித்தது. மத்திய அரசு சார்பிலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டது.
தீ விபத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மருத்துவமனையின் வரவேற்பறையை அடித்து நொறுக்கினர். மேஜை, நாற்காலிகளும், கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. 
இதற்கு முந்தைய தீ விபத்துகள் : இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துகள்.
2001 ஆக., 6: ஏர்வாடி மனநிலை பாதிக்கப்பட்டோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் பலி.
2004 ஜன., 23: ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தில் 50 பேர் பலி; 40 பேர் காயம்.
ஜூலை 16: கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 91 குழந்தைகள் பலி.
2005 செப்., 15: பீகாரின் குஷ்ரபூர் என்ற இடத்தில் வெடிபொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் பலி; 50 பேர் காயம்.
2006 ஏப்., 10: உ.பி., மாநிலம் மீரட்டில் வணிக கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் பலி.
பிப்., 22: தமிழகத்தில் வெடிபொருட்கள் குடோன் தீ விபத்தில் 10 பேர் பலி.
2010 மார்ச் 29: கோல்கட்டாவின் ஸ்டீபன் கோர்ட் என்ற பழமையான வணிக வளாக தீ விபத்தில் 42 பேர் பலி.
2011 நவ., 20: கிழக்கு டில்லியின் நந்னகிரி என்ற இடத்தில், திருநங்கைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி.
டிச., 9: தெற்கு கோல்கட்டாவின் தகுரியா என்ற இடத்தில், தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 88 பேர் பலி.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்