இராமாயணம்: பல்கலை பாடத்திட்டத்தில் சர்ச்சை




டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் படிப்பு பாடத்திட்டத்தின் பகுதியாக இருந்த ராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரை வலதுசாரி சார்புடையவர்களின் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளதை நாட்டின் முன்னணி வரலாற்று அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.
மறைந்த ஏ கே ராமானுஜன் அவர்களால் எழுதப்பட்ட "300 இராமாயணங்கள் - ஐந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகள்" என்ற புத்தகத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் இராமாயண கதைகளில் உள்ள மாறுபாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதில் வரும் கருத்துக்கள் இந்துக்களை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி ஒருவர் வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த விடயம் குறித்து பல்கலைக்கழகம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இதுபற்றி விவாதித்த டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு இந்த ராமாயணப் பாடத்தை நீக்க முடிவுசெய்துள்ளது. கல்விக் குழுவில் இருந்த 120 பேரில் வெறும் 9 பேர்தான் இந்த பாடத்திட்டம் நீக்கப்படுவதை எதிர்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அகல்யை சாபம்


இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட டெல்லி பல்கலைக் கழகத்தின் நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அ. மாரியப்பன், இராமாயணத்தில் வரும் ‘அகல்யையின் சாபம்’ என்ற கிளைக் கதையில் வரும் சம்வம் தொடர்பாக ஏ கே ராமானுஜத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

வால்மீகி இராமாயணத்தில் அகல்யை தானே விரும்பி இந்திரனை அழைத்ததாகவும், அதன்பின் இந்திரனின் உடல் ஆயிரம் பெண் குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் இது வேறு சில இராமாயணங்களில் ஆயிரம் கண்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏ கே ராமானுஜன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பெண் பேராசிரியர்கள் இது போன்றவிடயங்களை வகுப்பறையில் பேசுவது தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று கருதுவதாகவும் அ. மாரியப்பன் தெரிவித்தார்.
ஆனால் இந்த கட்டுரையை நீக்கக் கூடாது என்று தெரிவித்த பேராசிரியர் ஒருவர், பெரும்பான்மை முடிவு என்ற பெயரில் பெரும்பான்மயினர் ஆதரிக்கும் சிந்தாந்தங்கள் மட்டுமே பல்கலைக்கழகத்தால் ஆதரிக்கப்படும் என்ற தவறான செய்தியை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளதாக சாடியுள்ளார்.
ஏ கே ராமானுஜம் இராமாயணம் குறித்து எழுதிய சிறப்பான கட்டுரை டில்லி மத்தியப் பல்கலைக்கழகத்தால் தடை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் வெட்க கரமான செய்தி என்று சாகித்ய அக்காடமி விருது பெற்றுள்ள முன்னணி கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்தி கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு சிவசேனைக் கட்சியினர் செய்த வன்முறைகள் காரணமாக மும்பை பல்கலைக்கழகம் ரோஹின்டன் மிஸ்ட்ரி எழுதிய புத்தகத்துக்கு தடை விதித்தது. இந்திய அரசு கூட அவ்வப்போது சர்ச்சைக்குரிய புத்தகங்களுக்கு தடை விதித்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்துக்கும், கல்வி சுதந்திரத்துக்கும் தடையாக அமைவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்